ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

Photo of author

By Sakthi

 

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை…

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து 48 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

 

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஷாகீன் ஹன்டர்ஸ் அணியும் அபசின் டிபெண்டர்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அபசின் டிப்பெண்டர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் ஷாகீன் ஹன்டர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஷாகீன் ஹன்டர்ஸ் அணியின் கேப்டன் செதிக்குல்லா அடல் என்ற வீரர்தான் முதல் பேட்டிங்கில் ஒரே ஓவிரில் 48 ரன்களை எடுத்துள்ளார். முதல் பேட்டிங்கின் 19வது ஓவரை அபசின் டிப்பெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அமிர் ஸஸாய் வீசினார்.

 

19வது ஓவரின் முதல் பந்தை அமீர் ஸஸாய் நோ-பாலாக வீசினார். இருந்தும் அதை ஷாகீன் ஹன்டர்ஸ் அணியின் செதிக்குல்லா அடல் சிக்சராக மாற்றினார். அடுத்த பந்து வைடாக மாறியது. வைடாக மாறிய பந்து பவுண்டரி லைனை தொட்டதன் காரணமாக 5 ரன்கள் வழங்கப்பட்டது. அடுத்து வீசிய ஆறு பந்துகளையும் செதிக்குல்லா அடல் சிக்சர்க்கு பறக்கவிட்டார்.

 

இதனால் முதல் பந்தில்(நோ பால்) 7 ரன்களும் இரண்டாவது பந்தில்(வைடு பவுண்டரி) 5 ரன்களும் மூன்றாவது பந்தில் 6 ரன்கள், நான்காவது பந்தில் 6 ரன்கள், ஐந்தாவது பந்தில் 6 ரன்கள், ஆறாவது பந்தில் 6 ரன்கள், ஏழாவது பந்தில் 6 ரன்கள், எட்டாவது பந்தில் 6 ரன்கள் என்று மொத்தம் ஒரே ஓவரில் 48 ரன்கள் சேர்த்தார்.

 

இதனால் முதல் பேட்டிங்கில் ஷாகீன் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது. அடுத்து 214 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அபசின் டிப்பெண்டர்ஸ் அணி 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஷாகீன் ஹண்டர்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.