இன்றுடன் முடிவுக்கு வருகிறது அக்னி நட்சத்திரத்தின் வெயிலின் தாக்கம்! ஆனால்…..

Photo of author

By Sakthi

இந்த வருடம் கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் அதிகமாக காணப்பட்டது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை கடந்தது. இதனால் அக்னி நட்சத்திர வெயில் நிச்சயம் இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்களிடையே அச்சம் காணப்பட்டது.

அதனடிப்படையில், அக்னி நட்சத்திரம் ஆரம்பமான கடந்த 4ஆம் தேதி முதலே வெப்பம் வெகுவாக பொதுமக்களை வாட்டி வதைத்தது. ஆனாலும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது, ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது என சொல்லப்படுகிறது.

அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது.

இதன் காரணமாக, இந்த வருடம் அக்னி நட்சத்திர கோடைகாலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்த நிலையிலேயே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கடந்து அடித்தது. தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.

ஆகவே அனல்காற்று வீசியதன் காரணமாக, பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் 13 பகுதிகளில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியிருந்தது.

சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று காலை 102.38 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரி வெப்பமும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது, ஆனாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.