ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னணி கட்சிகளான அதிமுக, பாமக போன்றவை உட்கட்சி பூசலிலும், தலைமை போட்டியிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் ஆளுங்கட்சியான திமுக இவ்வாறான பிரச்சனைகளில் சிக்காமல் கூட்டணி கட்சியுடன் ஒத்துழைத்து வந்தது. இதனால் மக்களுக்கு அதன் மேல் நம்பிக்கை பெருகி வந்த சமயத்தில் திடீர் திருப்பமாக சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இது பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய பலம் சேர்க்கும் வகையில், திமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்தனர்.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் வலிமை குறையக்கூடும் என்றும், அதிமுக அணி பலம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவிலிருந்து விலகியவர்கள் கட்சியின் செயல்பாடுகளில் எங்களின் பங்கீடு குறைந்துள்ளது, அதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம் என்றும், ஆதரவாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் செல்ல முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் மூத்த அமைச்சர் எ.வ.வேலுவின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. அங்கு நடந்த இந்த அதிமுக இணைவு, வேலுவின் வலிமையை சவாலுக்கு உள்ளாக்கும் அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் திமுக அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படுமென்பது இதிலிருந்து தெளிவாகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்நிகழ்வு அதிமுகவுக்கு முக்கிய அரசியல் பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.