ADMK: அதிமுகவின் பிரதான எதிர் கட்சியாக அறியப்படும் திமுக ஆரம்ப காலத்திலிருந்தே வாரிசு அரசியல் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிமுகவிற்கு திமுக மேல் குற்றம் சாட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் வாரிசு அரசியல் பிரச்சனையை தன்னுடைய முதன்மை ஆயுதமாக வைத்து செயல்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் என்பது திமுகவில் மட்டுமல்லாது பாமகவிலும் இருந்து வந்தது. தற்போது அந்த வாரிசு அரசியல் உச்சத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், திராவிட கட்சியான அதிமுகவில் இந்த நிலை இல்லை என்று பலரும் நினைத்து வந்த சமயத்தில் அதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் சமீப காலமாக முக்கிய தலைவர்களின் விலகலும், இபிஎஸ்க்கு எதிரான வாதமும் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில், கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்போது கட்சியிலிருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும் போது, அதிமுகவில் இபிஎஸ்யின் மகன், மைத்துனன், மாப்பிள்ளை போன்றோரின் தலையீடு அதிகரித்துள்ளது நன்றாக தெரிகிறது என்று அவர் கூறினார்.
இதற்கு இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, எடப்பாடிக்கு அவரது சொந்த மகன் உதவி செய்வதில் என்ன தவறு இருக்கிறது, இது ஒன்றும் சட்ட விரோதமான செயல் கிடையாது. இதனை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது என்று கூறினார். இவரின் இந்த கருத்து, செங்கோட்டையனின் கூற்றை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல், அதிமுகவிலும், வாரிசு அரசியல் தலை தூக்கி விட்டது என்பதற்கு சான்றாகவே பார்க்கப்படுகிறது.

