ADMK BJP: அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, அமித்ஷாவுடன் நடத்திய சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவிற்கு 40 முதல் 50 தொகுதிகள் ஒதுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 4 இடங்களை கேட்டதாகவும், குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியை கட்டாயம் தங்களுக்கே தர வேண்டும் என வலியுறித்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்காக அமித்ஷா நேரடியாக பேசியதாகவும், அதற்கு எடப்பாடி ஒப்புதல் அளித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் பாஜக 10 தொகுதிகளில் 4 இடங்களை பிடிக்கத் திட்டமிட்டு இருப்பது அதிமுகவுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி எப்படி அமையுமென்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.