ADMK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுகளும், தொகுதி பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு பின் அதிமுக தலைமைக்கு எதிராக இருப்பவர்களுடன், ஒன்று சேர்ந்ததால் கட்சியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். இதனையடுத்து இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்த நிலையில், திடீரென விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவர் அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் என்பதால் அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருந்த இவருக்கு பதிலாக அதிமுக சார்பில் யாரை நிறுத்தலாம் என இபிஎஸ் தீவிர ஆலோசனையில் இருந்த நிலையில், தற்போது அதற்கான முக்கிய முகம் கிடைத்துள்ளது.
செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே.கே செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையனை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது அண்ணன் மகனை நிறுத்த இபிஎஸ் யூகித்துள்ளாராம். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டி வலுவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

