DMK ADMK TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக, நாதக, தேமுதிக, பாமக மற்றும் புதிதாக உருவெடுத்த தவெக போன்ற கட்சிகள் தீவிர ஈடுபாட்டில் உள்ளன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த சமயத்தில், திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய் பரபரப்பை கிளப்பினார். இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதிமுகவிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் அதிமுகவிற்கு இந்த செய்தி அதன் மதிப்பை குறைப்பது போல அமைந்தது.
இதனை இபிஎஸ் ஏற்றுகொள்ளவில்லை. எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவிற்கும்-திமுகவிற்கு தான் போட்டி என்று இபிஎஸ் கூறியிருந்தார். இத்தனை வருடங்களாக திமுகவும், அதிமுகவை தனது எதிரி என்று கூறி வந்த நிலையில் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் சமீப காலமாகவே திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடங்கி திமுக தலைமை வரை புதிய எதிரிகள், பழைய எதிரிகள் என்று தவெகவையும் எதிரி பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.
ஆனால் தற்போது அந்த நிலை மாறி திமுகவின் எதிரிகள் வரிசையில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2026 தேர்தலில் மக்களின் ஆதரவால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்றும், இந்த தேர்தலில் திமுகவிற்கும், பாஜகவிற்கும் தான் கடுமையான போட்டி நிலவ கூடும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து, அதிமுகவையும், தவெகவையும், திமுக எதிரியாகவே கருதவில்லை என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

