ADMK TVK: தமிழக அரசியல் களம் தேர்தலையொட்டி பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் முதன்மையானது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய்யின் அரசியல் வருகை தான். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே இதற்கான ஆரவாரமும், எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்று பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சேர்க்கை. இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துவிட்டார். மேலும் அதிருப்தி அமைச்சர்கள் பலரும் தவெகவுக்கு வரவுள்ளனர், அதற்கான வேலைகளை நானே செய்வேன் என்றும் சபதம் எடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ்யின் ஆதரவாளராக இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி கிருஷ்ணன் போன்றோரை தவெகவில் சேர்த்த KAS அடுத்ததாக, ஓபிஎஸ்யின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகி பெரியசாமி போன்ற முக்கிய தலைகளை குறி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஓபிஎஸ் கூடிய விரைவில் தவெகவில் இணைவார் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், அதற்கு முன் அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக தவெகவில் இணைவது ஓபிஎஸ் இணைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.