ADMK DMK: சட்டமன்ற தேர்தலை என்றாலே நம் நினைவுக்கு வரும் கட்சி அதிமுக, திமுக தான். ஆனால் இந்த முறை மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். நான்காவது கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. இந்த முறை இந்த 4 கட்சிகளிடையேயும் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் அந்தஸ்து அதிகம் உள்ள இடத்தில் மற்ற கட்சிகள் அதிக கவனம் செலுத்தும்.
அந்த வகையில் இந்த முறையும், திராவிட கட்சிகள் போட்டியிடுகின்றன. கொங்கு மண்டலம் என்றாலே அதில் எப்போதும் அதிமுக மேலோங்கி நிற்பது வழக்கம். இம்முறை அந்த இடத்தை திமுக பிடிப்பதற்கு முயன்று வருகிறது. அதற்காக செந்தில் பாலாஜியை களமிறக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக கோட்டையை யாராலும் அழிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் இபிஎஸ் திமுகவின் டெல்டா பகுதிகளை குறிவைத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை சேதமடைந்துள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் பேரிடர் என்பதால் திமுக இதன் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இதை முறியடித்து, நெல் மூட்டைகள் சேதமடைந்ததை சாதகமாக பயன்படுத்த நினைக்கும் இபிஎஸ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் அவரது எக்ஸ் தள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து வருத்தமும் தெரிவித்தார். இதனை சமாளிப்பதற்காக அமைச்சர்கள் தொடங்கி துணை முதல்வர் வரை அனைவரும் ஆதாரத்துடன் பேட்டியளித்து வருகின்றனர். டெல்டா பகுதியில் இபிஎஸ்யின் வருகை அவர் அந்த பகுதிகளை தன் வசப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இவரின் இந்த முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பதை சட்டமன்ற தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும்.

