ADMK: அடுத்த வருடம் நடைபெற போகும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் உட்கட்சி பிரச்சனைகளால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு, அக்கட்சி பலமிழந்து காணப்படுகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக 11 முறை தோல்வி அடைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அதிமுக தலைமையும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளும் தான் என பலரும் கூறினார்கள். அப்போதும் கூட அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து, கட்சியிலியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.
இதற்கு பின் டெல்லி சென்று வந்த ஓபிஎஸ் தனது கெடுவை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்று இருந்த பெயரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றியமைத்தார். இதனால் இவர் தனிக்கட்சி துவங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று, ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்யின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி இல்லாத கூட்டணியில் ஒன்றிணைவோம் என்று கூறியிருந்தார்.
எப்படியாவது மீண்டும் அதிமுகவில் நுழைய வேண்டுமென ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் இவரின் இந்த கருத்து, ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணையும் பணியை கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. மேலும் ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் பலரும் இபிஎஸ் இல்லாத கூட்டணியை விரும்புவதால், திமுக அல்லது தவெக, இந்த இரண்டு கட்சியில் எந்த கட்சியால் சேரலாம் என ஓபிஎஸ் தீவிர ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.