ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு குறித்த செயல்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளிலும் திராவிட கட்சிகள் வேகமெடுத்துள்ளன. இவ்வாறான நிலையில் அரசியல் அரங்கை ஆட்டம் காண வைக்கும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது.
இந்த ஆதரவு இவரை முதல்வராக்காவிட்டாலும், எதிர்க்கட்சி தலைவராக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் இவரை கட்சியில் சேர்க்கவும், இவரது கட்சியில் இணையவும் அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதிலும் முக்கியமாக திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், இபிஎஸ் தவெகவை நேரடியாகவே கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை அதிமுக ஏற்காததால் இந்த கூட்டணி கிடப்பிலேயே இருக்கிறது. விஜய்-அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபையை ஒரு முறை கூட பார்க்காதவர்கள் அதிமுகவை பற்றி பேசுகின்றனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று ஒன்று பட்ட கருத்துக்கள் உள்ள யாரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த மறைமுக கருத்து விஜய் மேலுள்ள பயத்தை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் விஜய்யை நேரடியாக விமர்சித்து விட்டால் அவர் வளர்ச்சி அடைந்து விடுவாரோ என்ற நோக்கில் அதிமுக விஜய்யை விமர்சிக்காமல் இருந்த நிலையில் ஜெயக்குமாரின் பேச்சு தவெகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்று பலரும் கூறுகின்றனர்.