ADMK DMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுகவின் போட்டியை மட்டுமே எதிர்கொண்ட அரசியல் அரங்கு, தற்போது, தவெக, நாதக போன்ற கட்சிகளும் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக மூத்த தலைவர்களின் மறைவிற்கு பிறகு, அதன் தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைவர் பொறுப்பை ஏற்றார். இதற்கு பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. இதனால் இந்த கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தல் மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு மிக முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, முதல் ஆளாக விருப்ப மனுக்களை வழங்கும் பணியையும் செய்து வருகிறது. இவ்வாறு தனது தேர்தல் பணியில் முழு கவனத்தையும் திருப்பியுள்ள அதிமுகவிற்கு பல்வேறு சிக்கல்களும் எழுந்துள்ளன.
அந்த வகையில், அதிமுகவின் முக்கிய முகமும், ஜெயலலிதா காலத்திலிருந்து அமைச்சராக பணியாற்றி வரும் சிவி சண்முகம், 2021 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் தோல்வி அடைந்ததால் இந்த முறை அவரது தொகுதியை மாற்ற உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் பகுதி சிவி சண்முகத்தின் கோட்டையாக இருந்த சமயத்தில் அங்கு திமுக வென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் தொகுதி மாறுவது, திமுக மேலுள்ள பயத்தை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.