ADMK: தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மக்கள் நல பணிகளை செய்தும், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்திய செயல்பாடுகளை பட்டியலிட்டும் அதனை மக்கள் மனதில் பதிய வைத்து, தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறிய கட்சிகளின் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. இப்படியான சூழலில், அதிமுகவில் மட்டும் உட்கட்சி மோதலும், தலைமை பிரச்சனையும் வெடித்து வருகிறது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதன் மீது கவனம் செலுத்தாமல், இவ்வாறான பிரச்சனையை தீர்ப்பதே இபிஎஸ்க்கு முழு நேர வேலையாகிவிட்டது. முதலில், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் தற்போது, எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்த எந்த வகையான நடவடிக்கையை எடுப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த சமயத்தில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் என்னுடன் தொடர்பில் தான் உள்ளார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எக்காரணம் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று இபிஎஸ் தெளிவாக இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால், அவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளரிடம் பரிந்துரைப்போம் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தால் இபிஎஸ் மிகவும் ஆத்திரத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் இணைத்து கொள்வேன் என்று இபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் கூறியதில்லை.
அப்படி இருக்க, இபிஎஸ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியாமல் இந்த கருத்தை ஊடகங்களிடம் கூறியது தவறு என்று இபிஎஸ் ஆதரவாலர்கள் கூறுகின்றனர். மேலும் இவரின் இந்த கூற்று நால்வர் அணியின் குரலாக இவர் செயல்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், செங்கோட்டையன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் ஓ.எஸ் மணியனாக இருக்குமோ என்ற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது.

