ADMK TVK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக இருந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமர்வது என்பதில் தொடங்கிய சண்டை இன்னமும் ஓயவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முந்தியடித்த கட்சிகளெல்லாம் தற்போது அதிமுக என்றாலே யோசிக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கெல்லாம் இபிஎஸ்யின் தலைமை தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த கூற்று உண்மை என்பது போல தான் அதிமுகவின் நடவடிக்கையும் உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் விஜய் கட்சி துவங்கி இருக்கிறார். இவர் அரசியலில் நுழைந்ததிலிருந்தே முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசானா தவெகவில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இவரின் இந்த இணைவு அதிமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் அதிமுகவிலருந்து பலரும் விலகி வருவதால் இபிஎஸ்யின் தலைமையின் மேல், அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக இன்னும் பலர் அதிமுகவை விட்டு விலகி வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

