TVK ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு முழு வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பலரும் கட்சி மாறி மாறி இணைந்து வருகின்றனர். இதற்காக தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திமுக, அதிமுக என அதிகமான தொண்டர்கள் இணைந்தாலும், திமுகவில் தான் முக்கிய தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு லாபமாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் திமுகவில் இணைந்து தற்போது முக்கிய பதவிகளில் உள்ளனர்.
அதனை முறியடிக்கும் வகையில் தவெக களமிறங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் மக்கள் சந்திப்பை துரிதப்படுத்தாத விஜய், முதலில் சில டாப் தலைகளை கட்சிக்குள் கொண்டு வரும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக, 2018 இபிஎஸ்யால் நீக்கப்பட்ட எம்.பி. கே.சி பழனிசாமியை தவெகவில் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இவருக்கு அதிக செல்வாக்கு உள்ளதால், ஒரு வேளை இவர் தவெகவில் இணைந்தால் அது விஜய்க்கு சட்டமன்ற தேர்தலில் சாதகமாக அமையும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் இபிஎஸ்க்கு, இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.

