ADMK TVK: தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது திராவிட கட்சிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கட்சிகளை விட திமுகவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஏனென்றால், விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறினார்.
இது அதிமுகவிற்கு அனைத்து வகையிலும் சாதகமாக அமைந்தது. அதிமுகவிற்கும் திமுக எதிரி என்பதால் விஜய்யுடன் சேர்ந்து அதனை வீழ்த்தி விடலாமென இபிஎஸ் கணக்கிட்டார். ஆனால் இபிஎஸ்யின் ஆசை ஏமாற்றத்தில் முடிந்தது. அதிமுக கூட்டணிக்கு விஜய் நேரடியாக நோ சொல்லியதால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை விமர்சித்திருக்கிறார்.
எந்த ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் போதும் அந்த கட்சி தலைவர்கள், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறுவது இயற்கை. 10 சதவீதத்திற்கு கீழ் வாக்கு வைத்திருப்பவர்களை கூட முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்கள் என்றும், தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறினார். ஏற்கனவே திமுக விஜய்யை எதிர்த்து வரும் நிலையில், கூட்டணிக்கு விஜய் மறுப்பு தெரிவித்ததால் அதிமுக அமைச்சர்களும் தவெகவை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சிபிஐ மூலம் பாஜகவும் விஜய்யை எதிர்க்க தயாராகிவிட்டது. புதிதாக களம் காண இருக்கும் விஜய் எப்படி இவ்வளவு எதிர்ப்புகளை சமாளிப்பார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

