ADMK DMK TVK: தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்பதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இவரது பிரச்சாரம், 27ஆம் தேதியான இன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் நடைபெறவிருக்கிறது.
இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர். லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் நடத்த அனுமதியளித்தனர். கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்பட்டு வரும் நிலையில் நேற்று அதிமுகவின் பிரச்சாரம் நடைபெற்றது.
அப்போது செந்தில் பாலாஜியை இபிஎஸ் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். தொடர்ந்து இன்று விஜய்யும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வது பேசு பொருளாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் மீது சுமத்தப்பட்டுள்ள பண மோசடி வழக்கு அக்டோபர் 6ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் விஜய்யும், இபிஎஸ்யும் தொடர்ந்து இந்த பகுதியில் பிரச்சாரம் செய்வது திமுக கோட்டையை தரைமட்டமாக்க தான் என்ற கருத்தும் நிலவுகிறது.
செந்தில் பாலாஜியின் மேல் உள்ள வழக்கையும், கரூரில் நடைபெறும் மணல் திருட்டையும், கிட்னி திருட்டையும் விஜய் தனது ஆயுதமாக பயன்படுத்துவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை பயன்படுத்தி அதிமுக, தவெக போன்ற கட்சிகள் கரூரில் தங்களை நிலைநாட்ட முயற்சி செய்கிறது என்றும் கூறப்படுகிறது. அதிமுக, தவெக தொடர்ந்து கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வது சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமென்றும் சொல்லப்படுகிறது.