TVK ADMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்தே அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம். இதனால் தமிழகத்தில் மிகபெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இபிஎஸ்யின் செயல்பாடும் அமைந்திருந்தது.
கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது, சட்டசபையில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது, அதிமுக பிரச்சாரத்தில் பறந்த தவெக கொடியை பார்த்து பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியது போன்ற இபிஎஸ்யின் அனைத்து நடைமுறைகளும் விஜய்க்கு சாதகமாகவே அமைந்தது. ஆனால் விஜய், பாஜகவிலிருந்து அதிமுக விலகினால் தான் கூட்டணி வைக்கப்படும், மேலும் முதல்வரை வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று பல நிபந்தனைகளை இபிஎஸ்யிடம் முன் வைத்துள்ளதாக தெரிகிறது.
இது மட்டுமல்லாமல் விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணியில் சேர விருப்பமில்லை என்றும் தவெக தொண்டர்கள் சமூக வளை தளங்களில் கூறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தவெகவின் இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து தவெகவின் கருத்தை தெரிவித்துள்ளார். தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில் இபிஎஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

