ADMK AIFB PBK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருகின்றன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. இதற்காக தனது கூட்டணியை பலமாக்க முயற்சித்து வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டார். மேலும் அண்மையில் தமாக கட்சியும் அதிமுக உடன் இணைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதன் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவராக பதவி ஏற்ற உடனேயே சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது கை கூடவில்லை. அதிமுகவின் முக்கிய முகங்கள் நீக்கப்பட்டிருப்பது தேர்தல் சமயத்தில் அதன் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறியும் இபிஎஸ் அதனை ஏற்கவில்லை. இவ்வாறான நிலையில், அதிமுகவிற்கு பலத்தை கூட்டும் வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கூட்டணி இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறப்படும் சூழலில், அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியும், புரட்சி பாரதம் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைவதை உறுதிபடுத்தியுள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில், அதிமுக கூட்டணி முழுவடிவம் பெறாமல் இருப்பதை அனைவரும் விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனத்திற்கு தற்போது இவ்விரண்டு கட்சிகளின் கூட்டணியும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.