ADMK TVK: சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவை பகைத்து கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோன்றிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால், என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பது பணிகளை மேற்கொள்வோம் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதனால் இவர் தனி கட்சி தொடங்குவார், இல்லையென்றால், ஓபிஎஸ் போல ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக, தவெகவில் இணைந்து, அங்கு அதிமுக ஒருங்கிணைப்பை மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் செங்கோட்டையன் கூறியது போல ஒருங்கிணைப்பு பணியை ஆரம்பித்து விட்டார். கோபி செட்டிபாளையத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் எம்.எல்.ஏ வான செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் அறிந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு கொங்கு மண்டலத்தில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தி இருக்கிறார்.
இப்படி இருக்கும் சூழலில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை மேலும் சறுக்கும் வகையில் செங்கோட்டையன் ஒரு செயலை செய்து வருகிறார். அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான தங்கமணி, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானத்தில் இடம் பெறாதது அவருக்கு, இபிஎஸ் மேல் உள்ள அதிருப்தியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போது, அதில் இவருக்கு சற்றும் விருப்பமில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் இவரை தவெகவில் இணைப்பதற்கான பணியை செங்கோட்டையன் மேற்கொண்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

