ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னணி கட்சியில் சேர்வதும், கட்சியை விட்டு விலகுவதுமாக உள்ளனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற அதிமுக விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார்.
குறிப்பாக தவெக திமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் இணைந்ததாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர் அதிமுக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களை நினைவுப்படுத்தி, மக்களின் அன்பும் நம்பிக்கையும் அதிமுகவிற்கே உள்ளது, அதனை வரவிருக்கும் தேர்தலில் வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டும் என்றும், அதிமுக எப்போதும் மக்கள் நலனுக்காகவே செயல்பட்டு வந்த கட்சி.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் உரிமைக்காக எப்போதும் போராடி வருகிறோம் என்றும், இன்று அதிமுகவில் இணைந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் வெற்றிக்கு பங்களிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார். புதியதாக இணைந்தவர்கள், அதிமுக கொடியை ஏற்றுக்கொண்டு, கட்சிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்தனர்.
கொங்கு மண்டலத்தில் காலூன்ற வேண்டுமென நினைத்த திமுகவிற்கு இந்த உறுப்பினர் சேர்க்கை பெரிய சவாலாக உள்ளது. சேலம் மாவட்டம் பாரம்பரிய ரீதியாக அதிமுகவின் வலுவான கோட்டையாக கருதப்படும் நிலையில், இந்த உறுப்பினர் சேர்க்கை, அதிமுகவின் வலிமையை மேலும் கூட்டும் வகையில் அமையுமென பேசப்படுகிறது.