PMK: பாமகவில் சில மாதங்களாகவே தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி குறித்த சச்சரவு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராமதாஸ் நீக்கினார். இதனை தொடர்ந்து அன்புமணியின் இடத்தில் யார் அமர போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவருக்கான அதிகாரம் அன்புமணியிடமே உள்ளது என்று அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக அன்புமணி பாமகவின் நிரந்தர முகவரியான தேனாம்பேட்டையை 10, திலக் தெரு, தி.நகர் என்று மாற்றியுள்ளார் என கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த முகவரி மாற்றம் என்பது ஏமாற்று வேலை என்றும் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு 2022 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே கட்சியின் தலைமை அலுவலக முகவரியாக தி.நகர் தான் இருந்து வருகிறது என்றும் அன்புமணி பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கும் அறிக்கையிலும் தி.நகர் முகவரி தான் கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் இது ஒன்றும் திடிரென்று நிகழ்ந்த நிகழ்வு அல்ல அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஜி.கே மணி இது திடீரென தெரிந்தது போல் பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றிவிட்டதாக கூறப்படுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி தனது அரசியல் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையத்தில் முகவரி மாற்றத்தை தவறான முறையில் செய்திருக்கலாம் எனக் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த முகவரி விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னர் இதிலுள்ள உண்மை வெளிச்சம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.