DMK TVK CONGRESS: 2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தொடக்க புள்ளியாக இருப்பது விஜய்யின் அரசியல் வருகை. இவர் ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அனைத்து ஊடகங்களிலும் தவெக தான் தலைப்பு செய்தியாக உள்ளது. விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அத்தனையும் தொண்டர்கள் கூட்டமாக மாறிவிட்டது. இவர் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறியதுடன், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு மிகவும் நெருக்கம் என்பதாலும், ஆட்சியில் பங்கை விரும்புவதாலும் தவெக உடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது கூட்டணிக்குரிய சந்திப்பாக தான் இருக்கும் என்று அரசியல் ஆர்வர்கள் கூறினார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்காது, திமுக உடன் தான் தொடரும் என்று பா.சிதம்பரம் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இவர், திமுக உடன் அரசியல் ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் தொடரும். காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு தமிழக முதல்வருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை முடித்த நிலையில், திமுகவும் தனிக்குழு அமைத்த உடன் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என்று கூறியுள்ளார். தவெக உடன் தற்போது வரை எந்த கூட்டணியும் இணையாத காரணத்தினால் காங்கிரஸை மட்டுமே விஜய் நம்பி இருந்தார். ஆனால் தற்போது பா. சிதம்பரத்தின் கருத்தால் இதுவும் கை நழுவி சென்றதால் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பலரும் கூறுகின்றனர்.