ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய்யும் களமிறங்கியுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளையும், மக்கள் சந்திப்பையும் மேற்கொண்டு வரும் விஜய்க்கு கரூர் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு வருவதற்கே விஜய்க்கும், தவெகவிற்கும் 1 மாத காலம் தேவைப்பட்டது. இதன் பிறகு தான் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது, தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதுமாகும்.
விஜய்க்கான ஆதரவை கண்ட அதிமுக அவரை கட்சியில் இணைத்து விடலாமே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. அதிமுகவின் முயற்சிகளை அறிந்தும் விஜய் அதை பற்றி எந்த கருத்தும் கூறாமலிருந்தார். அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிமுகவிற்கு பதில் கிடைத்தது. இதனால் அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த சமயத்தில் இதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்.
இது குறித்து பேசிய அவர், நாங்கள் எங்கள் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் கூட்டணி தான் 2026 தேர்தல் களத்தையே ஆட்டம் காண வைக்க போகிறது என்பதால் அதனை எதிர்நோக்கியே தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

