ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடந்த 9 நாட்களாக இடைவிடாத போர் நடைபெற்று வருகிறது மிகப்பெரிய பலம் கொண்ட ரஷ்ய ராணுவ படை இரவு, பகல் என்று ஓய்வில்லாமல் உக்ரைனை இடைவிடாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது.
அதேநேரம் உக்ரைன் ராணுவமும் ரஷ்ய ராணுவ படைக்கு சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. அதாவது உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தை அனுப்பாமல் ராணுவ தளவாடங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.
ஆகவே மிகப்பெரிய பலம் பொருந்திய ரஷ்ய ராணுவ படைக்கு உக்ரைன் ராணுவம் பெரும் சவாலாக விளங்கி வருகிறது.ஆனாலும் மிகப் பெரிய பலம் வாய்ந்த ரஷ்ய விமானப்படையை இன்னும் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலகில் அமெரிக்கா விமானப்படைக்கு இணையான விமானப் படையை கொண்டிருக்கும் ரஷ்யா இன்னும் தன்னுடைய விமானப்படையை இந்த போரில் களமிறக்காமலிருப்பது அனைவரையும் சந்தேகிக்க வைக்கிறது.
இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின் நிலையம் மீது ரஷ்ய ராணுவ படைகள் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மிகப்பெரிய அணு உலை வெடித்தால் அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருக்கிறார். அதோடு அந்தப் பகுதியில் தீயணைப்பு வீரர்களையும், அவசரகால சேவைகளையும், உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கதிரியக்க அளவுகள் அதிகரிப்பதற்கான எந்தவிதமான அறிகுறியுமில்லை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.