தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இருந்தாலும் கூட அந்த கோரிக்கையை இதுவரையில் அமைந்த எந்த அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், சென்ற சட்டசபை தேர்தலின்போது திமுக தரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனாலும் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆன பிறகும் கூட திமுக தன்னுடைய இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் திருமண உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை இதுவரையில் பாதி ரொக்கமாகவும் மீதி சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது.
இப்படியான நிலையில், இந்த திருமண உதவி தொகை முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது, இதற்கான அரசாணை நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பட்டப்படிப்பு டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை 50,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை 25000 ரூபாய் முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.