ADMK BJP: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாஜக முதலில் அதிமுகவை ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு பாஜக கூட்டணியிலும் சரி, அதன் உள் வட்டாரத்திலும் சரி மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதனை சீரமைக்க, செங்கோட்டையன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதே, இபிஎஸ்யும், செங்கோட்டையனும் ஒருவரை அடுத்து ஒருவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச, அப்போதும் கூட இது முடிவுக்கு வரவில்லை. மேலும் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவதை உணர்ந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் வரிசையாக கூட்டணியிலிருந்து விலகினார்கள். இவர்களை மீண்டும் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது கைகூடவில்லை.
இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடருவது பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த டெல்லி தலைமை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்-யை நியமித்துள்ளது. இவர் வரும் 22 ஆம் தேதி தமிழக வருகை தர உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த வருகையின் முக்கிய நோக்கம், இபிஎஸ்யை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசுவதும், பாஜகவிற்கு அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதுமாகும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.