BJP ADMK: 2026 யில் தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மற்ற கட்சிகளை விட அதிமுக மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய முகங்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தலைமை பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அப்போதிலிருந்தே, நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வரும் இபிஎஸ், ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டார். இந்நிலையில் பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது.
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களிலும் பாஜக தலையிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ், பாஜகவிடம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாமெனவும், ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் இல்லையென்றும் கூறி வந்தார். அதிமுகவின் பிரிவு தேர்தல் சமயத்தில் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த பாஜக அதனை இணைக்க முயற்சித்தும் அது கை கூடவில்லை. இதனால் இதை சரி செய்ய டெல்லி மேலிடம் ஒரு திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அது என்னவென்றால், இபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்புக்கு சம்மதிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக உள்ள டிடிவி தினகரன், ஓபிஎஸ், அண்ணாமலை போன்றரை ஒருங்கிணைத்து தமிழக தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முதல்வர் வேட்பாளரை மாற்றினால் கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் கூறிய காரணத்தினாலும், அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் எடப்பாடிக்கு எதிராக இருப்பதாலும் இந்த இணைப்பு சுலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமித்ஷா தமிழக வந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.