ADMK BJP: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் இந்த தேர்தலில் குறியாக உள்ளன. தேர்தல் ஆணையமும் அதன் பணிகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில், மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்திருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவது அமித்ஷா தான் என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே சில நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்ய மூத்த நிர்வாகிகள் பலரும், டெல்லி சேர்ந்து அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட, ஓபிஎஸ், அண்ணாமலை, டெல்லி சென்ற நிலையில் டிசம்பர் 14 ஆம் தேதி நயினார் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
டிசம்பர் 15 ஆம் தேதி அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தமிழகத்திற்கு வந்த உடன் முதல் வேளையாக, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றியும், அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவராக நியமிப்பது பற்றியும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கியமாக தமிழக தேர்தலில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு மற்றும், ஆட்சியில் பங்கை பற்றி அமித்ஷா நேரடியாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

