BJP PMK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் மும்முரமாக உள்ள நிலையில், பாமகவில் மட்டும் கட்சி யாரிடம் உள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. தொண்டர்கள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகை மேலும் வலுப்பெற்று ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க, இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
மேலும் சின்னத்திற்கு உரியவரும் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் சென்றார் ராமதாஸ். பாமகவில் தலைமை யார் என்பதில் சிக்கல் உள்ளதால், தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும், அதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாமகவின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அன்புமணி தரப்பு மட்டும் அதிமுக பக்கம் இருந்தால், வாக்கு வாங்கி சிதறும் என்பதை அறிந்த பாஜக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என நயினாருக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று டெல்லி சென்ற நயினாரிடம் தொகுதி பங்கீடு குறித்தும், பாமகவின் சேர்க்கை குறித்தும் பேசப்பட்டதாக தகவல் கூறுகிறது. மேலும், அமித்ஷா தமிழகம் வருவதற்குள் கூட்டணி இறுதி வடிவம் பெற வேண்டுமெனவும் நயினாருக்கு அறிவுறுத்தியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.