இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

Photo of author

By Janani

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

Janani

நெல்லிக்காய் தீபம் என்பது பண ஈர்ப்பு சக்திக்காகவும், ஆயுள் நீடித்து இருப்பதற்காகவும் ஏற்றக்கூடிய ஒரு முக்கியமான தீபம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேற நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி வந்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும்.

எந்த விதமான வேண்டுதல்களாக இருந்தாலும் அதற்கு எலுமிச்சம் பழம் அளவில் இருக்கக்கூடிய நெல்லிக்காயை வாங்கிக் கொண்டு, அதனை கத்தியை கொண்டு வெட்டாமல் ஏதேனும் ஒரு பொருளை வைத்து இடித்து அதன் சதைகளையும், கொட்டைகளையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இடித்து எடுத்த சதைகளை அரைத்து நெல்லிக்காய் சாற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு, அதில் 20 மில்லி அளவு இந்த நெல்லிக்காய் சாற்றை கலக்க வேண்டும்.

இப்பொழுது இதனைக் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது நிச்சயமாக உங்களது வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும். இவ்வாறு நெல்லிக்காயை இடித்து சாறு எடுக்க முடியாதவர்கள், விளக்கில் தேங்காய் எண்ணெயை ஊற்றி இடித்த நெல்லிக்காய் சதையை அப்படியே சேர்த்து, பஞ்சுத் திரி அல்லது தாமரைப்பூ தண்டு திரி போட்டு தீபம் ஏற்றினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ஏதேனும் ஒரு வேண்டுதல்களை குறிக்கோளாக கொண்டு தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு இல்லாமல் உங்களது வீட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது அந்த அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால், எத்தனை பிரச்சனைகள் இருக்கிறதோ அத்தனை பிரச்சனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தீபங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

உதாரணமாக உங்கள் வீட்டில் இரண்டு பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், இதேபோன்று இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும். ஒரு சிலர் நெல்லிக்காய் தீபம் என்றால் நெல்லிக்காயை விளக்கு போன்று அறுத்து, அதில் சிறிதளவு மட்டும் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது.

பொதுவாக ஒரு தீபம் என்பது பத்து நிமிடமாவது எரிய வேண்டும். நெல்லிக்காயை அறுத்து அதில் ஏற்றக்கூடிய தீபம் சிறிது நேரம் மட்டுமே எரியும். எனவே ஒரு அகல் விளக்கில் மேலே கூறியது போன்று தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யில் நெல்லிக்காய் சாற்றை கலந்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

அதேபோன்று காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் குத்து விளக்கு இது போன்ற விளக்குகளிலும் இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்ற கூடாது. மண் அகல் விளக்கில் மட்டுமே இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்ற வேண்டும்.

உங்களுடைய வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில், துளசி செடிக்கு இந்த நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வைத்தால், வீட்டில் இருக்கும் கஷ்டம் 3 வாரங்களில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். அதாவது வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் மட்டும் துளசி செடிக்கு முன்னால் நெல்லி தீபம் போட்டு பாருங்கள்.

இந்த நெல்லிக்காய் தீபத்தை நமது வீடுகளில் ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.