TVK AMMK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததன.
விஜய் திமுகவை அரசியல் எதிர் என்று கூறியதால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விஜய் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது. இதற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருமாறியவர்களுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது.
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக உடனான கூட்டணி குறித்து பல்வேறு இடங்களில் மறைமுகமாக சம்மதம் தெரிவித்தும் விஜய் இதனை பற்றி எதுவும் பேசாமல் உள்ளார். இதனால் டிடிவி தினகரன் விஜய் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று அமமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. விஜய் ஏற்கனவே திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறிய நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக கூறியதால் அதிமுகவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. தற்போது அதில் புதிதாக அமமுகவும் இணைந்துள்ளதாக தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர்.
இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தினகரனும் தவெகவின் எதிரி பட்டியலில் இடம் பிடித்தால் விஜய் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்று பலரும் வினவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், முதல் முறை அரசியலில் குதித்திருக்கும் விஜய் இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

