DMK TVK CONGRESS: அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக உழைத்து வருகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. மேலும் புதிதாக உதயமான கட்சியான தவெக தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க போராடி வரும் நிலையில், கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வரும் நாதகவும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் அடுத்ததாக தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. திமுக உடன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, விஜய் வருகையை பயன்படுத்தி திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தவெக உடன் கூட்டணி சேர்வோம் என காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் கூறி வந்தனர். இவ்வாறு, விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்கு எல்லா விதத்திலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.
கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிய அவர், தற்போது அதிகாரம் மட்டுமல்ல அதிகார பகிர்வும் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஆட்சியில் பங்கு தரவில்லை என்றால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஏற்கனவே தவெக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து தவெக கூட்டணிக்கு அடித்தளமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லாவிட்டாலும், அதன் கூட்டணி திமுகவிற்கு வேறு விதத்தில் பக்கபலமாக இருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள முடிவால் அறிவாலயம் உறைந்து போயுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.