ADMK PMK: இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நெருங்க இருக்கும் சமயத்தில், பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை உள்ளது. தந்தை-மகனின் சண்டை டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளையரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி இதனை மேடையிலேயே வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் அரங்கேற, தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார் ராமதாஸ். இது அன்புமணிக்கு, ராமதாசுக்கு உண்டான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.
இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம், பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால், தேர்தல் நேரத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும். இதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு இருக்க பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும், அன்புமணி அதிமுக-பாஜக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ராமதாஸ் கூட்டணி குறித்து எந்த ஒரு முயற்சியையும் எடுக்காத நிலையில், அன்புமணி அதிமுக உடன் பேசி வருகிறார். இதையறிந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினரான அருள், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ராமதாஸ் தான் உண்மையான பாமக. வேறு யாரும் யாருடனும் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக உடன் அன்புமணி எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் ராமதாஸ் முடிவே இறுதியானது என்பதை பிரதிபலிக்கிறது. மேலும், ஏமாற வேண்டாம் என்று அவர் கூறியதால் ராமதாஸ் அதிமுகவை தவிர்த்து வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்படுகிறது.

