PMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கட்சி யாரிடம் உள்ளது என்பதே கேள்வி குறியாக உள்ளது. முதலில் தனது மகன் என்று கூட பாராமல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.
ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற ராமதாஸ், அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கியுள்ளதால், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைப்பதாக உத்தரவிட்டது.
இவ்வாறு அன்புமணிக்கும், ராமதாசுக்கு இடையே பல்வேறு மோதல் போக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறி வருவதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான ஜி.கே. மணி அண்மை காலமாகவே உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசிவந்தார். மேலும், பாமகவின் பிரிவுக்கு நான் தான் காரணம் என்று அன்புமணி கூறுகிறார்.
அது நிரூபிக்கப்பட்டால் நான் எனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலக தயார் என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில், அன்புமணி, ஜி.கே. மணிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் தலைமைக்கு எதிராக பொதுவெளியில் பேசியதாகவும், ஒரு வாரத்திற்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை ஜி.கே. மணி இதற்கு பதிலளிக்காமல் இருந்தால் அன்புமணியால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.