PMK: அதிமுகவை போலவே பாமகவிலும் உட்கட்சி பூசல் தொடர்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க அதிமுக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போல, பாமக நிறுவனர் ராமதாசும் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கட்சியின் முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் அன்புமணி தரப்பு முகவரி மாற்றப்படவில்லை எனக் கூறி வந்தது. தற்போது கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும், இளையஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அன்புமணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அன்புமணியிடம் உள்ளது வெறும் கூட்டம் தான் என்றும், பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசிடம் உள்ளது தான் என்றும் தெளிவுப்படுத்தினார். முகவரியை வைத்துக்கொண்டு தலைவர் என்று சொல்ல முடியாது. அன்புமணியின் பதவி எப்போதோ பறிபோய் விட்டது, பதவி போனபிறகு பொது குழுவை கூட்டுவது, பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற செயல்கள் ஒருபோதும் பலனளிக்காது.
சிறிய கட்சியாக இருந்த பாமகவை இவ்வளவு தூரம் வளர்த்தவர் ராமதாஸ் என்றும், அவரை நம்பி தான் பாமக செயல்படுகிறது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். டாக்டர் ராமதாஸ் இருக்கும் வரை கட்சியியை அவரே நிர்வகிப்பார் என்றும் கூறினார்.