ADMK PMK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் போன்றவை தினந்தோறும் பேசப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் பிரச்சனை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள தலைமை போட்டி டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்று விட்டது.
அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ கட்சின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக அறிவித்த நிலையில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்த வழக்கிலும் அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்காத நீதிமன்றம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற சிக்கல் வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைப்பதாக தீர்ப்பு வழங்கியது.
இவ்வாறு பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பெரிதாகி கொண்டே சொல்வதால் பாமக இரண்டு தரப்பாக பிரிந்திருந்தது. இந்நிலையில் அன்புமணி தரப்பு அதிமுக பக்கமும், ராமதாஸ் தரப்பு திமுக பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் பாமக கூட்டணி கிடப்பிலேயே இருந்து வந்தது. இந்த இக்கட்டான சூழலில் அன்புமணி அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். பாமகவின் முழு அதிகாரமும் அன்புமணி கையில் உள்ளது என்று கூறப்படும் சமயத்தில் அவர் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆவலர்கள் கூறுகின்றனர்.