புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை மதுவை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0
115
Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Live
Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Live

சென்னையில் தொடர்ந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதற்கு காரணமாக உள்ள புகையிலை மற்றும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், பெங்களூரில் உள்ள தேசிய நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையமும் இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் ஆண்களைப் பொறுத்தவரை எட்டில் ஒருவருக்கும், பெண்களில் ஏழில் ஒருவருக்கும் புற்றுநோய்த் தாக்கும் ஆபத்து உள்ளது. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்துள்ள ஆண்கள் அதிகம். அதேபோல், சென்னையிலுள்ள பெண்கள் மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய மாநகரங்களில் உள்ள பெண்களை விட புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ளதாக இரு மருத்துவ நிறுவனங்களும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.

சென்னையில் ஆண்களை விட பெண்கள் தான் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றாலும் கூட, பெண்கள் புற்றுநோயை விலை கொடுத்து வாங்குவதில்லை. சென்னை பெண்களுக்கு பெரும்பாலும் வாழ்க்கை முறை பிரச்சினைகள் காரணமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. ஆண்களுக்கு வாழ்க்கை முறை சிக்கல்களால் புற்றுநோய் தாக்குவதில்லை. மாறாக, அளவுக்கு அதிகமான மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் தான் ஆண்களுக்கு புற்றுநோயைத் தருகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், நாக்குப் புற்றுநோய் ஆகியவற்றால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் மதுவும், புகையிலையும் தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களுக்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கூட, அது தாமதமாகத் தான் கண்டறியப்படுகிறது என்பதால், அவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை; அதனால் ஆண்களின் உயிரிழப்பு அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் புற்றுநோய் தாக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் படித்து விட்டு, கடந்து செல்வதற்காக வெளியிடப்படவில்லை. அவை நம்மிடையே எச்சரிக்கை மணியை அடித்துள்ளன. தமிழ்நாடு அரசும், சென்னை மக்களும் விழிப்புணர்வு அடைந்து புகையிலை மற்றும் மதுவின் பயன்பாட்டையும், அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் சென்னை புற்றுநோயின் தலைநகரமாக மாறுவதை தடுக்க முடியாது. சென்னை வாழ வேண்டுமானால் மதுவும், புகையும் ஒழிக்கப்பட வேண்டும்.

மதுவும், புகையும் தான் புற்றுநோய்க்கு காரணம் என்பது நேற்று கண்டறியப்பட்டு, இன்று வெளியிடப் பட்ட உண்மையல்ல. காலம்காலமாக இந்த இரட்டைத் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மது குடிப்பதால் 60 வகையான நோய்கள் தாக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மது குடிப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், கல்லீரல் இழைநார் வளர்ச்சி, நிமோனியா, காசநோய் உள்ளிட்ட 200 வகை நோய்கள் தாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டில் எச்சரித்தது. அது குறித்து விளக்கிக் கூறி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்; மக்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. மாறாக, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் கூட மதுவுக்கு அடிமையாகும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது.

அதேபோல், புகையிலைப் பொருட்களின் விற்பனையும் கட்டுப்படுத்தப்படவில்லை. விதிகளை மீறி சட்டவிரோதமான புகையிலை விளம்பரங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில், மாணவர்களே கை நீட்டி எடுக்கும் தொலைவில் தான் சிகரெட், மெல்லும் புகையிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலை நீடிக்கும் வரை சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புற்றுநோய் தாக்குவதை தடுக்க முடியாது.

புற்றுநோய் மிக மோசமான உயிர்க்கொல்லி நோய் என்பது அனைவரும் அறிந்த உண்மை. புற்றுநோய் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்தினால் தான் மக்கள் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வாழ முடியும். அத்தகைய நிலையை ஏற்படுத்த புகையையும், மதுவையும் ஒழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Previous articleதஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next articleமுகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!