மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

0
152

மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

பாமக சார்பாக கட்சியை வளப்படுத்தும் வகையில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முப்படைகளின் தொண்டர்களுடன் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் முப்படைகளின் இந்த சந்திப்பை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு இந்த முப்படைகளின் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.

அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும்,கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும் பாமகவின் சார்பாக அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகிய மூன்று படைகள் பாமகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கென குறிப்பிட்ட அளவு நிலையான வாக்கு வங்கி இருந்து வந்தாலும் அக்கட்சியால் தேர்தல் அரசியலில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனியாக களம் கண்டது.

இதன் மூலமாக குறிப்பிட்ட வாக்குவங்கியை உறுதி செய்து தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்து நிலையில் அக்கட்சியால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனையடுத்து தற்போது நடந்த மக்களவை தேர்தலில் தமிழக அரசியல் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து போட்டியிட்டது. இதிலும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவின் வாக்குகள் பெரிதும் உதவியது. அடுத்து தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற பாமக வாக்குகள் பெரிதும் உதவியது.

இந்நிலையில் தான் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்தார். கூட்டணி தொடரும் நிலையில் இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட மாநகராட்சி மேயர் பதவிகளையும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் பாமக தரப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பு கிடைக்கும் நிலையில் பாமக நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ள தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்யும் வகையில் தான் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை பட்டை தீட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் கிராம வாரியாக களத்தில் இறக்க பாமக தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இந்த முப்படைகளை சேர்ந்தவர்களுடன் இன்று கலந்துரையாடல் நடத்திய அன்புமணி ராமதாஸ் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணியின் பாசிட்டிவான பேச்சைக் கேட்டு அதில் கலந்து கொண்ட இந்த முப்படைகளின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகம் ஆகினர்.

இதனையடுத்து வடதமிழகத்தில் 75 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அங்கு மட்டும் இந்த முப்படைகளை இறக்கி முழு வீச்சில் செயல்பட பாமக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முப்படைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முப்படைகளில் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பாமகவின் மது ஒழிப்பு,மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்,நாகரிக அரசியல் உள்ளிட்ட சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் இணைக்க கட்சி மேலிடம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தாங்கள் கேட்டவாறு ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவி என்பதை ஏற்று கொண்டால் அதிமுக கூட்டணியில் தொடரலாம் இல்லையென்றால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கலாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகாவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்
Next articleடெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்