பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அண்மையில் கட்சியின் சின்னத்தை எனது அனுமதி இல்லாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு ராமதாஸிற்கு சாதகமாக முடிந்தது. அது மட்டுமல்லாமல் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம் தர வேண்டுமென கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அன்புமணி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதாக ராமதாஸ் கூறியுள்ளார். சிறிது நாட்களாகவே பா.ம.க கட்சியில், அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் தலைமை போட்டி நிலவி வருகிறது.
கட்சியில் உள்ள இளைஞர்கள், அன்புமணி பக்கமும், மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் கட்சி இரண்டாக பிளவுப்பட்டிருப்பது நல்லதல்ல; என்று பா.ம.க கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அன்புமணி தனி அணியாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியை பொறுப்பிலிருந்து நீக்கியதன் மூலம் எங்கள் கட்சிக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது மாறாக அது அவருக்கே பெரும் பின்னடைவு என்றும் கூறியுள்ளார் ராமதாஸ். இதன் மூலம் அன்புமணியை நீக்கியதால் கட்சியில் பிளவு ஏற்படாது, ஒருமைப்பாடு தான் அதிகரிக்கும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பது வெளிப்படுகிறது.