ADMK PMK: இன்னும் 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அதிமுகவிலும், பாமகவிலும் உட்கட்சி பிரச்சனை தலை தூக்கியுள்ளது. அதிமுகவில் பல அணிகள் உருவான நிலையில், மீதமிருக்கும் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சி இப்படி பிளவுபட்டிருப்பது வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்று அனைவரும் இபிஎஸ்யிடம் கூற, அவரோ தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கை சாத்தியமில்லை என்று கூறி வருகிறார்.
மற்றொரு புறம் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தலைமை மோதல் தற்சமயம் வரை தீர்ந்த பாடில்லை. இவ்வாறு சென்று கொண்டிருக்க கூட்டணி குறித்த பேச்சும் இரு தரப்பிடமும் பேசப்பட்டு வருகிறது. அன்புமணி அதிமுக பக்கம் ஆர்வம் காட்டி வரும் வேளையில், ராமதாஸ் திமுக பக்கம் ஆதரவளித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று அன்புமணி தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக, தவெக இதில் பங்கேற்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இந்த செயல் அன்புமணியை புறக்கணித்து விட்டு, பாமகவின் மொத்த அடையாளமாக ராமதாஸ் இருப்பதால் அவருடைய தரப்பு மட்டும் போதும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக அன்புமணியை ஒதுக்கி விட்ட இந்த சமயத்தில், தவெக பக்கமும் செல்ல முடியாத அன்புமணி ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.