PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் சச்சரவு நிலவி வருவது, அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையமோ, கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று, ராமதாஸ் தரப்பு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ்.
இது தொடர்பாக அன்புமணியிடம் கேட்ட போது இது எங்களின் உட்கட்சி பிரச்சனை இதனை பற்றி வெளியே சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், அன்புமணி ராமதாஸுடன் சுமுகமான முறையில் செல்ல முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து செய்தியாளர் ஒருவர், வெளியில் சண்டை போடுவதை போல நடித்து விட்டு, கட்சிக்குள் ஒற்றுமையாக இருப்பது மாஸ்டர் பிளேனா? என்று கேட்ட போது, ஆள விடுங்க என்று கூறி கையெடுத்து கும்பிட்டு சென்றார் அன்புமணி.
இந்நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம் மீண்டும் இது குறித்து கேட்ட போது, பாமகவின் உட்கட்சி பிரச்சனை சுமுகமான முறையிலும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் 6 மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் அன்புமணி ராமதாஸுடன் சுமுகமான முறையில், எந்த விதமான மனஸ்தாபமும் இல்லாமல் கட்சியில் பழையபடி இணைய போகிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

