BJP: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக, பாஜக கூட்டணியில் இணையும் போது, அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறி நிபந்தனை விதித்தார் இபிஎஸ். இதனடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பின் தற்போதைய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார்.
நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பிறகு அண்ணாமலைக்கும், டிடிவி தினகரனுக்கும், இடையில் நல்ல நட்புறவு இருந்தது. அண்ணாமலையின் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்த இபிஎஸ் மீது அண்ணாமலைக்கு கோபம் இருந்து வருகிறது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து அதிமுகவை எதிர்ப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் சிறிது காலமாகவே பாஜக விவகாரங்களில் தலை காட்டாமலிருந்த அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் இரண்டு முறை கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை தொடங்கும் முன் சொல்கிறேன். அப்படி தொடங்குவதாக இருந்தால் அதற்கு நீங்கள் தான் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.
இவரின் இந்த பதில் நகைச்சுவையாக இருந்தாலும், அரசியல் களத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்சி தொடங்கவில்லை என்றால் அதை வெளிப்படையாகவும், உறுதியாகவும் சொல்லியிருக்கலாம். இவ்வாறு பொடி வைத்து பேசுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இவர் கட்சி தொடங்குவதை உறுதி செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.