BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது கட்சியிலிருந்து விலகி புதிய பாதையை தேர்ந்தெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சேர்ந்த சில ஆண்டுகளில் மக்கள் மனதில் தனக்கான இடத்தை உருவாக்கிய அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியிலிருந்து சற்று விலகி இருப்பது கவனிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே அவர் பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்ந்த அண்ணாமலை, ரஜினியிடம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும், இதனை டெல்லி தலைமைக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குவாரா இல்லை கட்சிக்குள் மீண்டும் வலிமையாக செயல்படுவாரா, அல்லது ரஜினியின் ஆலோசனைக்கு பிறகு தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.
அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால், அது மூன்றாவது பெரிய சக்தியாக அமையக்கூடும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.