TVK DMK: 2026யில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடத்திய விஜய் இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்தனர்.
இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காரணம் காவல் துறையினரின் கவன குறைவு என்று சிலர் கூற, மற்றொரு புறம் விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழுவை அமைத்துள்ளது. இதனை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை போன்றோர் திமுக அரசு தன் மேலுள்ள தவறை திசை திருப்பவே தனி நபர் குழுவை அமைத்துள்ளது. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கூறியிருந்தனர். விஜய் தரப்பும் இதை சிபிஐ-க்கு கைமாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரான ஏ.பி.சூரியபிரகாசம் தனி நபர் குழு அமைத்தது தவறு என்று கூறியுள்ளார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரியபிரகாசம் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் அவர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் அருணா ஜெகதீசன் தலைமையிலான குழுவை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார். ஏற்கனவே திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் குரல் எழுப்புவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.