தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.
நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் கதி என்று கிடக்கிறேன், ஆனால் சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டே தான் இருக்கிறது எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை” என்று புலம்புபவர்களும் உள்ளனர்.
முருகனுக்கே ஒரு காலத்தில் சோதனைகள் வந்ததால்தான் கோபித்துக் கொண்டு பழனிக்கு சென்றார். அப்படி இருக்கையில் முருகனுடைய பக்தர்களாகிய நமக்கும் பல சோதனைகளை கொடுத்து தான் உயர்வுக்கு கொண்டு வருவார். உங்களுடைய சோதனைகள் மற்றும் வேதனைகளை, சாதனைகளாக மாற்றும் பொறுப்பு அப்பன் முருகருக்கு உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக அப்பன் முருகனை வழிபட்டு வருவார்கள். ஒரு சிலர் முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல் இதுபோன்ற பாடல்களை பாராயணம் செய்தும் வருவார்கள். ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான திருப்புகழ் உண்டு என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றனர்.
அதாவது அவரவர் பிரச்சனைக்கு உரிய திருப்புகழை பாராயணம் செய்தால் மட்டுமே அவருடைய பிரச்சனை விரைவில் சரியாகும். எனவே எந்தெந்த பிரச்சனைக்கு எந்தெந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் காண்போம்.
உங்களது வேண்டுதலுக்கு உரிய திருப்புகழை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 6 முறை, 9 முறை, 12 முறை என தினமும் உங்களது வேண்டுதல் நிறைவேறும் வரை திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.
1. குழந்தை வரம் வேண்டுபவர்கள் “செகமாயையுற்று திருப்புகழை” பாராயணம் செய்ய வேண்டும்.
2. திருமண வரம் வேண்டுபவர்கள் “நீலங்கொள் மேகத்தின் திருப்புகழை” பாராயணம் செய்ய வேண்டும்.
3. கல்வியில் வெற்றி பெற “மதியால் வித்தகனாகி” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.
4. சொந்த வீடு அமைய வேண்டும் என்றால் “அண்டர்பதி குடியேற திருப்புகழை” படிக்க வேண்டும்.
5. தீராத நோய்கள் குணமாக “இருமலு ரோக திருப்புகழை” படிக்க வேண்டும்.
6. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால் “நினைத்தது எத்தனையில்” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.
7. வருமானம் பெருகி பணம் கையில் தங்க வேண்டும் என்றால் “பெருக்க சஞ்சலித்து” என்ற திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.
8. அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் “ஆங்குடல் வளைந்து” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.
9. சொத்து வழக்கு பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் “கண்கயற்பிணை” திருப்புகழை படிக்க வேண்டும்.
10. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்பட “தொந்தி சரியாய் திருப்புகழை” படிக்க வேண்டும்.
11. எதிரிகளின் தொல்லை நீங்க “தரிக்குங்கலை” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.
12. உங்களுக்கு ஒரு வேண்டுதல் மட்டும் இல்லாமல் பல விதமான வேண்டுதல்கள் இருக்கிறது என்றால், அந்த அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற “முத்தைத்தரு பத்தித்திரு” என்ற திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.