2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப் போகிறது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை தொடங்கியும் இருப்பார்கள். ஆனால் தற்போது பெற்றோர்களுக்கு தனது குழந்தையை எந்த வயதில் எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற குழப்பம் பெரும்பாலும் பரவி வருகிறது. அதிலும் மாநில பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? என்ற குழப்பமும் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. எனவே அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம்.
முதலில் மாநில பாடத்திட்டத்தினை எடுத்துக் கொண்டால் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிற்கு முன்பு உள்ள வகுப்புகளில் படிக்க வேண்டும். அதாவது Pre KG, LKG, UKG போன்ற வகுப்புகளில் படிக்க வேண்டும். ஆனால் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக இந்த வகுப்புகளை அங்கீகரிக்காததால் அங்கன்வாடிகளில் இந்த வயதுடைய குழந்தைகள் படிக்கலாம். தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் மேற்கூறிய வகுப்புகளில் சேர்க்கலாம்.
ஐந்து வயது முழுமையாக நிரம்பி இருந்தால் அந்த குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. இந்த குழந்தைகளின் வயதில் ஒரு ஆறு மாதம் முன்னும் பின்னும் ஆக இருந்தாலும் கூட அந்த குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சில பள்ளிகளில் அதனை அனுமதிப்பதில்லை.
CBSE யை பொருத்தவரை ஏப்ரல் 1- 2021 முதல் மார்ச் 31- 2022 வரை பிறந்த குழந்தைகள் அதாவது மூன்று அல்லது மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் நர்சரி வகுப்புகளில் பயிலலாம் என்று கூறியுள்ளனர்.LKG வகுப்பில் உங்கள் குழந்தையை சேர்க்க வேண்டும் என்றால் ஏப்ரல் 1, 2020-மார்ச் 31, 2021 வரை பிறந்த குழந்தைகள் பயிலலாம் என்றும் கூறியுள்ளனர். அதாவது நான்கு அல்லது நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை LKG ல் சேர்க்கலாம்.
அதேபோன்று உங்கள் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றால் ஏப்ரல் 1, 2018-மார்ச் 31, 2019 வரை பிறந்த குழந்தைகளை சேர்க்கலாம். அதாவது ஆறு மற்றும் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம். புதிய கல்விக் கொள்கையானது சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஏழு வயது உடைய குழந்தைகள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆனால் அதனை தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை என்பதால் ஆறு வயது உள்ள குழந்தைகள் தான் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள வயதிற்கு ஏற்ப அந்தந்த வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே பத்தாம் வகுப்பில் அவர்களது வயது சரியாக இருக்கும். இல்லை என்றால் வயது குறைவாக இருந்தால் அவர்களது தேர்வு விண்ணப்பம் ஆனது நிராகரிக்கப்பட்டுவிடும். இதனை காரணமாக வைத்து தான் தனியார் பள்ளிகளில் வயது முறையினை கடுமையாக பின்பற்றி வருகின்றனர்.
ஆனால் நமது நாட்டு முதலமைச்சர் இடம் இதற்கான கேள்வியினை எழுப்பிய போது அவ்வாறு எந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதில்லை. ஒருவேளை அவ்வாறு வயது குறைவாக இருந்தாலும் கூட அதற்கான ஒரு விண்ணப்பக் கடிதம் ஒன்றினை எழுதி வாங்கிக்கொண்டு அந்த குழந்தைகளை தேர்வு எழுத அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்ற பதிலை கூறியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு விதமான வயது வரம்பினை வைத்துள்ளனர் என்பதால் பெற்றோர்கள் மிகுந்த குழப்பம் கொள்கின்றனர். எனவே இதற்கான ஒரு தகுந்த விதிமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.