மணி பிளான்ட் என்றாலே நமக்கு அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு வாஸ்து செடி என்று நம் அனைவருக்கும் தெரியும். வாஸ்து செடியாக விளங்கக்கூடிய இந்த மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரிந்து கொண்டு அதன்படி வைத்தால் மட்டுமே அதற்கான பலன்களை நாம் பெற முடியும். இல்லை என்றால் அந்த வாஸ்துவிற்கு எதிரான பலன்களே நமது வீட்டில் நடக்கும். மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரியாமலே இன்று பலரும் அவர்களது வீட்டில் வைத்து வருகின்றனர். எனவே எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்ப்போம்.
மணி பிளான்ட் செடியானது எந்த அளவிற்கு வளர்கிறதோ அந்த அளவிற்கு வீட்டில் செல்வமும் புகழும் ஏற்படும் என மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் மணி பிளான்ட் செடியினை நமது வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு ஒரு தொழிலையோ அல்லது ஒரு வாய்ப்பினையோ ஏற்படுத்தித் தரும் அதனை நாம் பயன்படுத்திக் கொண்டு உழைத்தால் மட்டுமே செல்வ வளம் கிடைக்கும்.
இந்த மணி பிளான்ட் செடியினை சிலர் வீட்டிற்கு வெளியிலும் சிலர் வீட்டிற்கு உள்ளேயும் வளர்த்து வருகின்றனர். ஆனால் வீட்டிற்கு வெளியே மக்கள் அனைவரும் பார்க்கும் விதத்தில் வளர்ப்பது தான் சரியான முறை என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த செடியானது காற்றில் உள்ள நச்சுக்களை எடுத்துக்கொண்டு நமக்கு சுத்தமான காற்றினை தரும். மக்கள் அனைவரும் பார்க்கும் விதத்தில் இந்த செடியினை வளர்க்கும் பொழுது நமது வீட்டிற்கு வரக்கூடிய கண் திருஷ்டி ஆனது நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செடியினை வைப்பதற்கு உகந்த திசையாக தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசையினை வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தென் கிழக்கு திசையானது சுக்கிர பகவானுக்கு உரியதாகவும், கிழக்கு திசையானது விநாயகருக்கு உரிய திசையாகவும் கூறப்படுகிறது. சுக்கிர பகவான் ஒரு மனிதருக்கு தேவையான சுகபோக வாழ்க்கையும் சகல பாக்கியங்களையும் தரக்கூடியவராகவும், விநாயகப் பெருமான் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் முதன்மையாக நின்று வெற்றியை தரக்கூடியவராகவும் விளங்குகின்றனர்.
சூரிய பகவான் உதிக்கக்கூடிய திசையாகவும் இந்த கிழக்கு திசை விளங்குவதால் கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் மணி பிளாண்ட் செடியினை வளர்ப்பது நேர்மறை ஆற்றல்களையும், செல்வ வளத்தையும் தரக்கூடிய ஒரு வாஸ்து செடியாக விளங்குகிறது. ஆனால் தப்பி தவறியும் கூட இந்த செடியினை வடக்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனென்றால் பண இழப்பு ஏற்படுவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் வளர்க்க இயலாதவர்கள் மேற்கு திசையில் வைத்து வளர்க்கலாம். அதற்கும் வாய்ப்பு இல்லை என நினைப்பவர்கள் மண்ணில் வைத்து தான் வளர்க்க வேண்டும் என இல்லை, எனவே ஒரு சிறிய ஜாடியில் வைத்தும் வீட்டிற்குள் வளர்க்கலாம்.
இந்த மணி பிளான்ட் செடியினை யாருக்கும் தானமாகவும் கொடுக்கக் கூடாது, அதே சமயம் யாரிடம் இருந்தும் தானமாகவும் வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் அதற்கான மகிமை கிடைக்காது. ஒன்று கடையில் பணத்தை கொடுத்து வாங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நம்மலாகவே செடியினை எடுத்து வர வேண்டும். வீட்டிற்குள் வைத்து வளர்க்கும் பொழுது இது எலக்ட்ரானிக் கதிர்வீச்சுகளை ஈர்ப்பதாகவும், அதே சமயம் வெளியில் வைத்து வளர்க்கும் பொழுது விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வராமலும் பாதுகாக்கிறது. மேலும் நாம் சுவாசிப்பதற்கு ஏற்ற சுத்தமான காற்றினையும் இந்தச் செடி நமக்கு வழங்குகிறது.