முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி!
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இது தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து என்று தான் சொல்ல வேண்டும். அந்த கோர விபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் காரணமாக அவரது உடல் மற்றும் அவரது மனைவியின் உடல் இன்று காலை 11 மணியளவில் டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதை தொடர்ந்து காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் பகுதிக்குபிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இலங்கை, பூடான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவ தளபதிகளும் அந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்று அவர்களுக்கு இதயம் கனத்த இறுதி அஞ்சலியை செலுத்தினர்.