தமிழ்நாட்டில் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திட மின்சார வாரியம், ஆர்.சி.டி என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சாதனம் மின் ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே மின் இணைப்பை அணைக்கும் திறன் கொண்டது.
இந்த உயிர் காக்கும் சாதனத்தை அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதிகளின் தொகுப்பில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது மின்சார வாரியம்.
புதிதாக மின் இணைப்பு பெற அனுமதி கோருவோர், இணைப்பு கோரும் கட்டிடத்தில் ஆர்.சி.டி (Residual Current Device) என்ற சாதனத்தை பொருத்த விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பு வழங்கப்படாது என்று மின்சார வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (வீடுகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், சிறு அங்காடிகள் இவற்றில் மின் விபத்துகள் குறைத்திட) ஒருமுனை, மும்முனை இணைப்புகளில் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் மின் கசிவை உணரும் ஆர்.சி.டி (Residual Current Device) சாதனத்தை பொருத்த வேண்டும்.
மேலும் 10 கிலோ வாட்டிற்கு மேல் உள்ள (பெரிய தொழிற்சாலைகளில்) மின் இணைப்புகளில் மின் கசிவு மற்றும் தீ விபத்து தவிர்க்க மொத்த மின் இணைப்பு தொடங்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவுக்கு மின் கசிவை உணரும் ஆர்.சி.டி (Residual Current Device) சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.